உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அதன் சேவை விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. புதிய விதிமுறையின்படி, பயனர்கள் தொலைபேசி எண்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கோடு பகிர்ந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலோன் மஸ்க்கும் விமர்சித்துள்ளார்.
அவர், "தரவுகள் பகிர கட்டாயப்படுத்தும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் செயலியை பயன்படுத்தலாம்" எனப் பரிந்துரைத்துள்ளார். ஆனால், பயனர்களின் தனியுரிமைத் தரவுகள் பாதுகாக்கப்பட்டுதான் வருகின்றன என வாட்ஸ்அப் தரப்பில் கூறப்படுகிறது.
"வேறு நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தரவுகளை அணுக முடியாத வண்ணம் கட்டமைத்துவிட்டு, தாங்கள் மட்டும்தான் தங்கள் பயனர் தரவுகளைத் திருடுவோம் என்பதுபோல் புதிய திருத்தப்பட்ட விதிமுறை உள்ளது" என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.