ஹைதராபாத்: சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. தங்கள் கனவை நிறைவேற்ற பல லட்ச ரூபாய் செலவழித்து கார் வாங்கும் பலரும், தங்களது காருக்கு காப்பீடு செய்வதில்லை. ஏதோ ஒரு தருணத்தில் விபத்து நேரும்போதுதான் வாகனத்தை காப்பீடு செய்திருக்கலாமே என்கிற எண்ணமே தோன்றும். 'வரும்முன் காப்பது சிறந்தது' என்னும் பழமொழிக்கேற்ப சிலர் மட்டுமே முன்னெச்சரிக்கையோடு தங்கள் வாகனத்திற்கு காப்பீடு எடுக்கின்றனர்.
இரு வகையான காப்பீட்டுத் திட்டம்
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் பலரும், தங்கள் சொந்த வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர். இதன் விளைவாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. மோட்டார் வாகனச் சட்டப்படி அனைத்து வாகனங்களும் காப்பீடு செய்திருக்க வேண்டும். வாகனக் காப்பீட்டில் இரண்டு வகை உண்டு - ஒன்று விரிவான காப்பீடுத் திட்டம், மற்றொன்று மூன்றாம் நபர் காப்பீட்டுத் திட்டம்.
மூன்றாம் நபர் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே, சட்டப்படி வாகனத்தை ஓட்ட முடியும். பின்வருபவற்றில், வாகனக் காப்பீட்டில் எவையெல்லாம் செய்யக் கூடாது என்பதைக் காண்போம்.
சரியான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுத்தல் அவசியம்
வாகனத்திற்கான காப்பீட்டை தற்போது ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் எடுக்க முடியும். தற்போதைய சூழலில் ஆன்லைன் வாயிலாகக் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிக்கவே மக்கள் விரும்புகின்றனர். வாகன காப்பீடு புதுப்பித்தலாக இருந்தாலோ அல்லது புதிய காப்பீட்டுத் திட்டம் பெற வேண்டுமானாலும் காப்பீட்டு நிறுவனங்களின் சேவை மையங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன. குறைவான காப்பீட்டுத் தொகையில் காப்பீடு செய்ய வேண்டுமெனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால் பல காரணிகளைக் கருத்திற்கொண்டு நமக்கு எந்த மாதிரியான காப்பீட்டுத் திட்டம் பொருத்தமாக இருக்கும் என அறிந்து காப்பீட்டுத் திட்டம் எடுத்தல் அவசியம்.
விரிவான காப்பீட்டின் சிறப்பம்சம்
கூடுமானவரை, விரிவான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல் சிறப்பான தேர்வாக அமையும். இந்த விரிவான காப்பீட்டுத் திட்டத்திலேயே மூன்றாம் நபர் காப்பீடும் அடங்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.