தமிழ்நாடு

tamil nadu

சங்கிலி தொடரால் சரியும் பொருளாதாரம்... மீட்பது எப்படி?

By

Published : Sep 7, 2020, 3:17 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 24 விழுக்காடு வரை சரிந்துள்ளது.

சங்கிலி தொடரால் சரியும் பொருளாதாரம்... மீட்பது எப்படி
சங்கிலி தொடரால் சரியும் பொருளாதாரம்... மீட்பது எப்படி

கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னரே பொருளாதாரம் தொடர்ந்து சரிவடைந்து வந்தது.

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கணித்திருந்தனர். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். வணிகம் செய்துவந்தவர்கள் எதிர்பாராத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மக்கள் வருவாய் இழந்து அத்தியாவசிய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து, வியாபாரமும் குறைந்துள்ளது. இதனால், மேலும் பல நிறுவனங்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு என இறங்கிவிட்டன. அண்மையில் கரோனா பாதிப்புக்கு பின்பு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொன்னால் மக்கள் வாங்காமல் பொருள்கள் விற்பனை பாதிக்கிறது, இதனால் அந்நிறுவனங்கள் பாதிப்படைவதால், மேலும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர், வேலையிழக்கின்றனர்.

இது ஒரு சங்கிலி தொடராக மாறி, பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கிறது. பெரு நிறுவனங்களின் வணிகம் பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் ஏற்படுகிறது.

பொருளாதார சங்கிலித் தொடர் வீழ்ச்சிப் பாதையில் செல்லாமல் தடுக்க ஒரே வழி அரசு செலவினங்கள் அதிகரிப்பதுதான் என்கிறார் மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பைச் சேர்ந்த விக்ரம் விஜய ராகவன்.

"நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான கடன்களின் விகிதம் (Debt to GDP ratio) ஏற்கனவே அதிகரித்துள்ளது, இதனால் மேலும் செலவு செய்ய அரசு தயங்குகிறது. ஆனால், இதுபோன்ற முன்பு எப்போதும் காணாத கடினமான காலகட்டங்களை சமாளிக்க புதிய, இதற்கு முன்பு எடுக்காத நடவடிக்கைகள் கையாள்வது அவசியம்.

அரசு தற்போது வழங்கியுள்ள கடன்களுக்கான வட்டியை திரும்பச் செலுத்தும் அவகாசம் என்பது தற்காலிகமான தீர்வே. இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. பொருளாதார சூழலால் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களால் கடனை திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்படும்.

அடுத்து வரும் காலங்களில் வராக்கடன்கள் பெருமளவில் அதிகரிக்கும். 4.7 விழுக்காடாக இருக்கும் வாராக்கடன்கள் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேல் சென்றால் மிக மோசமான பிரச்னையை நாம் சந்திக்க வேண்டும். இது மிகப்பெரிய உயர்வு. வளர்ந்த நாடுகளில் வராக்கடன் 2 முதல் 4 விழுக்காடு வரையே இருக்கும்.

கடன்களை மறுசீரமைக்கும் திட்டங்களை கொண்டுவர வங்கிகள் திட்டமிட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு எந்தப் பலனும் தரப்போவதில்லை. சாதாரண மக்களிடம் பணமில்லாவிட்டாலும் முதலீட்டாளர்களிடமும், சந்தையிலும் பணம் உள்ளது. இந்த நேரத்தில் அதனை முதலீடு செய்தால் நஷ்டம் அடைவோம் என வெளியே எடுக்க மறுக்கிறார்கள்.

அரசு முதலில் முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். இதற்கு அரசு செலவினங்களை அதிகரிக்க வேண்டும். சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், துறைமுகங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்வர், மீண்டும் பொருளாதாரம் மேம்படும். தற்போது அமெரிக்காவில் நாம் பார்க்கும் அனைத்து நெடுஞ்சாலைகளும் 1930 பொருளாதார சரிவுக்குப் பிறகு கட்டப்பட்டதுதான்.

அரசு செலவினங்களைத் தாண்டி, அரசு வரிச் சலுகைகள் கொடுத்து தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்குள் புதிய தொழில்களை தொடங்குபவர்களுக்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்துபவர்களையும் ஊக்குவிக்கும் வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பல்வேறு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சீராகும்" என்றார்.

இதையும் படிங்க: தொழில் செய்ய உகந்த மாநிலம்; ஆந்திராவுக்கு முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details