தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 10:39 AM IST

ETV Bharat / business

குடிபெயர் தொழிலாளர் தலையெழுத்தை மாற்றுமா சிறப்பு நிதிச்சலுகை?

ஹைதராபாத்: தேசியளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக குடிபெயர் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளான நிலையில் சிறப்புப் பொருளாதார நிதிச்சலுகை அவர்களுக்கு உரிய பங்களிப்பை அளிக்குமா என்ற சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Migrant
Migrant

ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் முறையான உணவின்றி, உறைவிடமின்றி தங்களது சொந்த ஊருக்குச் சென்று சேர தவித்துவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தில் நிவாரண நிதி குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்மூலம் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் உடனடியாகச் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

திட்டம் குறித்து ஒரு அலசல்

பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியதுதான். அதேவேளை, அதை நடைமுறைப்படுத்துவதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. இதை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கான உறவு, மாநிலங்களுக்கிடையேயான உறவு சீராக இருக்க வேண்டியது அவசியம்.

குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கும் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு என்ற அறிவிப்பு நிச்சயம் உதவும். அதேவேளை, இந்த நடவடிக்கையுடன் சேர்த்து நேரடி பண உதவித் தொகை என்பது அத்தியாவசியமான ஒன்று.

வெறும் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் மட்டுமே மனிதனுக்குத் தேவையான ஒன்று அல்ல; மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு உள்பட மக்களுக்குத் தேவையான பொருள்கள் பல உள்ளன. ஆனால், அவற்றை அரசு முற்றிலும் கண்டுகொள்ளவில்லை.

பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டையில்லாதவர்களும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை முறையாகக் கண்டறிந்து பொருள்களைச் சேர்ப்பது நிர்வாகத் துறையின் கையில்தான் உள்ளது.

மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கிராமங்களுக்கு திரும்பச் செல்வதால் அவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.40,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் பல பகுதிகளில் 10 விழுகாட்டிற்கும் குறைவானர்களுக்கே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களுக்கு ஏற்றவாறு இந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்குவதற்கான பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. தற்போது அறிவித்துள்ள நிதிச்சலுகையுடன் சேர்ந்த இந்த மாற்றங்களையும் மத்திய அரசு மேற்கொள்வதற்கான தேவையும் உள்ளது. குறிப்பாக இந்த நூறுநாள் என்ற கணக்கை தூக்கிவிட்டு அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ப வேலைசெய்யும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும்.

அதேபோல் அனைத்து தொழிலாளர்களையும் வேளாண்துறை சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்தாமல், திறனுக்கேற்ப அவர்களின் சொந்த ஊரிலேயே கட்டுமானம், மின்சார சாதனங்கள் சார்ந்த பணிகள், பிளம்பிங் வேலை உள்ளிட்ட திறன்சார்ந்த வேலைகளில் பயன்படுத்தலாம்.

அத்துடன் பெண்கள் பலருக்குச் சமையல் சார்ந்த திறன் அதிகமுள்ள நிலையில், உணவு சார்ந்த தொழில்கூடங்கள் உருவாக்கப்பட்டு பெண்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்யலாம்.

எனவே தற்சார்பு இந்தியா என்ற பெயரில் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தில் அரசு மேலும் கவனத்துடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால்தான் குடிபெயர் தொழிலாளர்களின் சிக்கல், பொருளாதார மேம்பாடு, ஊரக வேலைவாய்ப்பு என்ற அனைத்துத் திட்டங்களும் முறையான பாதையில் சென்று பலனளிக்கும்.

கட்டுரையாளர் முனைவர் மைத்ரி கோஷ், பொருளாதார பேராசிரியர் (கொல்கத்தா)

மேற்கண்டவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தாகும். அதற்கும் ஈடிவி பாரத் நிர்வாகத்திற்கு பொறுப்பில்லை.

ABOUT THE AUTHOR

...view details