இந்திய சந்தையில் எப்போதும் டீசலைவிட ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிக விலைக்கே பெட்ரோல் விற்பனை செய்யப்படும். இதனால் விலையைக் கருத்தில்கொண்டு, வணிக நோக்கத்தில் இயக்கப்படும் லாரி, கார் போன்ற வாகனங்கள் டீசல் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் வருவாயைப் பெருக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் வரிகளை விதித்தன.
அதன்படி டெல்லி அரசு, பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை 27 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகவும், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை 16.75 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகவும் அதிகரித்தது.
அதன்படி தற்போது டெல்லி அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17.71 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசலுக்கு 17.60 ரூபாயையும் மதிப்புக் கூட்டு வரியாக வசூலிக்கிறது. இது தவிர மத்திய அரசும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.98 ரூபாயும், டீசலுக்கு 31.83 ரூபாயும் கலால் வரி வசூலிக்கிறது.