இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார பாதிப்பைச் சீரமைக்கும்விதமாக மத்திய அரசு பல்வேறு நிதி அறிவிப்புகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, பணப்புழக்கத்தை அதிகரிக்க சிறு, குறு நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் சந்தையில் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், நேற்று முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் கோடி அவசர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் காந்தி நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள சிறு, குறு தொழில்நிறுவனங்கள் நாட்டின் வேலைவாய்ப்பின் மையங்களாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் தொழில் துறை பெரும் சுணக்கத்தில் உள்ளன. ஏற்கனவே முறையான நிதி இல்லாமல் தவித்துவரும் இந்தத் தொழில் துறை தற்போது கரோனாவுக்குப்பின் முற்றாக முடங்கியுள்ளது.
இந்த மோசமான சூழலைச் சீர்செய்ய அரசு பல நடவடிக்கைளையும் அறிவிப்புகளையும் மேற்கொண்டுவருகின்றது. இருப்பினும் இவை களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சந்தேகமே. காரணம், நிறுவனங்கள் எந்தவித தைரியமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அஞ்சுகின்றன.