பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கான காரணம் முதலில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பதற்றம் என்றார்கள், அதனால் கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே இருக்கும் என்றார்கள். அதன்பின் கோதுமை பஞ்சம் தலைதூக்கும், அதனால் விலை உயரும் என்றார்கள்.
பின்னர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என்றார்கள். இப்படியே பல்வேறு காரணங்களைக்கூறி சரிவுக்கு மேல் காரணம் தேடிக்கொண்டிருந்த வேளையில், செபி அமைப்பில் இருந்த ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது என்ற தகவலும் தற்போது வந்துள்ளது. ஆகவே, வீழ்ச்சிக்குக் காரணம் தேவையில்லை, தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது, பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி.
ரூ. 5 லட்சம் கோடி இழப்பு
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (இன்று) சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,600 புள்ளிகளில் வீழ்ச்சி தொடங்கி, இறுதியில் 1,491 புள்ளிகள் குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 382 புள்ளிகள் குறைந்து, வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.