2019-20 கடைசி காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.1 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது. கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக வளர்ச்சி குறைந்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டின் கடைசி கட்டமான மார்ச் மாதத்தில்தான் கரோனாவின் தாக்கம் அதிகரித்ததாகவும் ஆட்சி அமைத்ததிலிருந்தே மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்த தவறான கொள்கைகளால் மட்டுமே வளர்ச்சி குறைந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாஜக தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடைசி காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 விழுக்காடுக்கு கீழ் இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், 3.1 விழுக்காடாக வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை பாஜக எப்படி கையாள்கிறது என்பது தெரியவருகிறது. கடைசி காலாண்டின் 7 நாள்கள் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.