குறைந்த விலையில் அட்டகாசமான வசதிகளை வழங்குவதால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் பெருமளவு இருக்கிறது. இருப்பினும், இந்திய-சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக உருவாகியுள்ள பதற்ற நிலை காரணமாக சீன நிறுவனங்களைப் புறக்கணிக்கும் மனநிலை இந்தியாவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் இருப்பு ஜூன் மாதம் 81 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடகக் குறைந்துள்ளதாக கவுண்டர் பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில், இந்தியாவில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை என்பது சுமார் 51 விழுக்காடு குறைந்துள்ளது.
அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வெறும் 1.8 கோடி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதம் ஒரு ஸ்மார்ட்போன்கூட விற்பனையாகவில்லை.
சீன நிறுவனமான சியோமி அதிகபட்சமாக 29 விழுக்காடு சந்தையைத் தன்வசம் கொண்டுள்ளது. அதேபோல, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற சீன நிறுவனங்களான ரியல்மி 11 விழுக்காடும், ஓப்போ ஒன்பது விழுக்காடும் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் சியோமி 30 விழுக்காடும் ரியல்மி 14 விழுக்காடும் ஓப்போ 12 விழுக்காடும் சந்தை இருப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.