கரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்ததோடு அனைத்துத் துறைகளும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ரியல் எஸ்டேட் துறையையும் கரோனா விட்டுவைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் யாரும் தேவை இன்றி வெளியில் வரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதனால் வீடுகளை வாங்க பொதுமக்கள் யாரும் முன்வராததால் ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திப்பதாலும், வேலையின்மை அதிகரித்துள்ளதாலும் மக்களின் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் அவர்களால் வீடு வாங்க இயலாது. எனவே, ரியல் எஸ்டேட் துறை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வீட்டின் விலையைக் குறைத்தால் மட்டுமே, நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், இதனால் ரியல் எஸ்டேட் துறை விரைவில் மேம்படும் எனவும் புதிய சிஐஐ தலைவர் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்துவதை விட, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வேலை வழங்குவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'லாக்டவுன் கரோனாவை தடுக்காமல் நாட்டின் வளர்ச்சியைத்தான் தடுத்துநிறுத்தியுள்ளது'