டெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் நுகர்வோருக்கு, மத்திய பட்ஜெட் 2021-22 இல் சில விரும்பத்தகாத செய்திகள் உள்ளன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீது விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிக்கப்படும் என்று முன்மொழிந்தார்.
அந்த வகையில், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.4 விதிக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில்லறை விலையில் அதிக வித்தியாசம் இருக்காது, ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில தனி வரிகளை குறைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைத்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிக்கப்பட்டதன் விளைவாக, அடிப்படை கலால் வரி (பிஇடி) மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நுகர்வோர் கூடுதல் சுமையை சுமக்க மாட்டார்கள் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. நாட்டின் பெருநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .90க்கும் மேல் உயர்ந்து விற்பனையாகின்றன.
இதையும் படிங்க: பெட்ரோல் போல் பற்றி எரிந்த கிணற்று தண்ணீர்!