வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் முதல் பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாகத் தாக்கல் செய்தார். அப்போது, வருமான வரி விலக்கு, பெருநிறுவனங்கள் வரி குறைப்பு என சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
சொன்னது அவ்வளவு! கிடைத்ததோ இவ்வளவுதான்!
இதன்மூலம் அரசுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும் பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை வெறும் 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமேவரி திரட்டப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் கூறியதில் வெறும் 45.5 விழுக்காடு மட்டுமே கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை திருப்புவதற்கான பொறுப்பு வழங்கப்பட்ட நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு இது கடினமான நேரமாக அமைந்துள்ளது. அருண் ஜேட்லியின் இறப்புக்குப் பின்னர், அந்த இடத்தை பூர்த்திசெய்ய, பாஜக அரசு நிர்மலா சீதாராமனை கொண்டுவந்தது.
மோடி 2.0 அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்
மோடி 2.0 தொடங்கியதிலிருந்தே நிர்மலா சீதாராமனுக்கு இது கடினமான நேரம் என்றுதான் கூற வேண்டும். பொருளாதாரம் ஏற்கனவே சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.
2018-19ஆம் ஆண்டு 5.8 விழுக்காடாக இருந்த நாட்டின் உள்நாட்டுமொத்தஉற்பத்தி 2019-20ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.0 விழுக்காடு அளவுக்கு சரிந்து அதிலே நிலைபெற்றது. மேலும் இது குறைந்து இரண்டாவது காலாண்டில் 4.5 விழுக்காடாக சரிந்தது. இது ஆறு ஆண்டுகள் கண்டிடாத வீழ்ச்சியாகும்.
'அரசுக்கு சவாலாகப் பார்க்கப்படுவது வருவாய் திரட்டல். நாட்டினுடைய வளர்ச்சி சரிந்துகொண்டே செல்வதால் அது நேரடியாக நாட்டின் வருவாய் வசூல் குறைகிறது' என ஃபிட்ச் நிறுவனத்தை சேர்ந்த முதன்மைப் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா தெரிவித்துள்ளார்.