ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கை பல்வேறு கட்டங்களைத் தாண்டியே நிதியமைச்சரால் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பயண விவரம் இதோ:
பட்ஜெட் தயாரிப்பு:
- பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் 5 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். பொதுவாக பிப்ரவரி மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் தயாரிப்பு பணி செப்டம்பர் மாதமே தொடங்கிவிடும்
- இந்த வருடம் மக்களவைத் தேர்தல் வந்ததை ஒட்டி பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
- தேர்தலுக்குப்பின் புதிய அரசு அமைந்தவுடன் அமைச்சரவை கூடி பட்ஜெட் தேதியை அறிவிக்கும்
- பட்ஜெட் தயாரிக்கும் பணியை பட்ஜெட் பிரிவு என்ற நிதித்துறையின் தனிப்பிரிவு மேற்கொள்ளும்
- செப்டம்பர் மாதம் பட்ஜெட் குறித்த சுற்றறிக்கையானது மத்திய அமைச்சரவைகள், அனைத்து மாநில அரசுகள், அரசு பிரிவுகள், தன்னாட்சி அமைப்புகள், பாதுகாப்புத்துறை ஆகியவற்றிற்கு அனுப்பப்படும்
- மேற்கண்ட அமைப்புகள் அதன் வரவு - செலவுகளைக் கணக்கிட்டு நிதிநிலை குறித்த அறிக்கையை பட்ஜெட் தயாரிப்புப் பிரிவுக்கு அனுப்பி வைக்கும்
- இந்த விவரங்களை வைத்து அனைத்து துறைகளையும் கலந்தாலோசித்தபின் பட்ஜெட் மதிப்பீடானது தயார் செய்யப்படும்
- இந்த மதிப்பீடு நிதி ஆலோசகர் பார்வைக்கு வைக்கப்பட்டு அவரின் திருத்தங்களுக்குப்பின் ஒப்புதலுடன் நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்
- இதற்குப்பின் வரி விதிப்பு குறித்து மட்டும் நிதியமைச்சர் முடிவெடுப்பார். அதன் பின் பட்ஜெட் உரை தயார் செய்யப்படும்
- தயார் செய்யப்பட்ட உரை பிரதமரின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவரின் ஆலோசனைக்குப் பின், அச்சிடும் பணி மேற்கொள்ளப்படும்
- நாடாளுமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அல்வா தயார் செய்யப்பட்டு நிதிநிலை அறிக்கை அச்சிடும் பணி தொடங்கும்