பட்ஜெட் என்னும் இந்த வார்த்தை ஒவ்வொருவரின் வீடு தொடங்கி ஒட்டுமொத்த நாடு வரை அனைவரின் வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்ஜெட் என்ற வார்த்தை பிரெஞ்சின் 'Bougette' என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இதன் அர்த்தம் லெதர் பை என்பதாகும்.
1860ஆம் ஆண்டில் அன்றைய பிரிட்டானிய சான்செலரான வில்லியம் எவர்ட் கிலாடுஸ்டோன் பட்ஜெட் தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்தார். அப்போது தனக்குத் தேவையான நிதிநிலை தொடர்பான ஆவணங்களை சிகப்பு வண்ண லெதர் பெட்டியில் வைத்திருந்தார்.
இந்த வழக்கத்தை பின்பற்றித்தான் தற்போதும் நாட்டின் நிதியமைச்சர் பெட்டியில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வருகிறார்.
முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை 1860ஆம் ஆண்டு பிரிட்டானிய நிதியமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரைச் சாரும். அன்றைய காலத்தில் மாலை 5 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அவற்றில் முக்கியமாக வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகளே இருக்கும்.
சுதந்திர இந்தியாவின் முதல் இடைநிலை பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்ஜெட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. அதேவேலையில் சட்டப்பிரிவு 112 இல் பட்ஜெட்டை ஆண்டு நிதிநிலை அறிக்கை என்ற வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.