இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை சேவை சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப்பின் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
ஜியோவின் போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வோடாபோன்-ஐடியா என்ற இருபெருநிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அளவிற்கு சந்தை பெரும் ஆட்டத்தைக் கண்டது.
இந்நிலையில், 4ஜி சேவைகளை பெரும்பாலான மக்களிடம் ஜியோ கடந்த மூன்று ஆண்டுகளில் சென்று சேர்த்துள்ளது. அதேவேலையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் மூன்று ஆண்டுகளாகியும் 4ஜிக்கான உரிமத்தைக்கூடப் பெற இயலவில்லை.
அத்துடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தன் நிதிநிலை தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில், 2018-19ஆம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 14 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் இருந்தநிலையில், ஓராண்டில் இந்தத்தொகை இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.
சக போட்டியாளர்கள் குறைந்த விலையில் சேவை அளிப்பது, 4ஜி சேவையை இன்னும் அறிமுகப்படுத்தாதது, ஊழியர்களின் அதிகப்படியான சம்பளத்தொகை போன்ற அம்சங்கள் இப்பிரச்னைக்குக் காரணம் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் வருவாயில் 75 சதவீத தொகையை ஊழியர்களின் சம்பளத்திற்கே நிறுவனம் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் பதிலளித்த ரவிசங்கர் பிரசாத்