இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 4ஜி சேவைகளை வழங்கிவருகிறது. இருப்பினும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக 4ஜி சேவைக்கான அனுமதியை வழங்காமல் தாமதித்துவந்தது.
நீண்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக, கடந்தாண்டு 4ஜி சேவைகளுக்கான அனுமதியை மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கியது. அதன்படி 4ஜி சேவை வழங்குவதற்கான பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக, சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளின்போது சீன நிறுவனங்களுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், சீன கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவுறுத்தியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், பிஎஸ்என்எல் 4 ஜி விரிவாக்கப் பணிகளுக்காக விடப்பட்டிருந்த டென்டர் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
சீன நிறுவனங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கேற்ப புதிய டெண்டர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேக் இன் இந்திய திட்டத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இந்த புதிய டெண்டர் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் பணிகளை மேற்பார்வையிட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவையும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையின் மூத்த அலுவலர் இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்றும் பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினர்களும், தொழில்துறையிலிருந்து ஒருவரும், இரண்டு வல்லுநர்களும் இந்த குழுவில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மாத்தில் மூன்றாவது முறையாக விலை ஏற்றத்தைச் சந்தித்த விமான எரிபொருள்