அண்மைக்காலமாக கார், பைக், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து, தங்களின் தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாகன உற்பத்தியிலும், அதனை நம்பியுள்ள உதிரி பாகம் தயாரிப்பிலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக கடுமையான சரிவை சந்தித்துள்ள கார் விற்பனையையை ஊக்குவிக்க அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெற்ற 37ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், கார்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி (செஸ்) குறைக்கப்பட்டது. இருப்பினும் பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த சூழலில் அடுத்த மாதம் முதல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பண்டிகைக் கால விற்பனையை அதிகரிக்க தங்களது கார்களுக்கான விலையை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்ட குறைத்து வருகின்றன.
நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, நேற்று முதல் குறிப்பிட்ட கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. ஏற்கெனவே அந்நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் கார்களின் விலையை குறைத்துள்ளது. ஆல்டோ, ஸ்விப்ட், செலாரியோ, பலேனோ, இக்னிஸ், டிசயர், எஸ்-கிராஸ், பிரீஸா உள்ளிட்ட கார்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தங்களது கார்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கிவருகிறது. ஹரியர் கார்களுக்கு 50 ரூபாயும், ஹெக்சா வகை கார்களுக்கு ஓன்றரை லட்ச ரூபாயும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஹரியர், ஹெக்சா தவிர டிகர், டியாகோ, நெக்சான் கார்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 14 பேர் அமர்ந்து பயணிக்கும் வசதிகொண்ட டாடா விங்கெர் (winger) மாாடலுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா கார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா கார்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிவிக் கார் இரண்டு லட்ச ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது, சிஆர்-வி, ஹோண்டா சிட்டி, பிஆர் வி உள்ளிட்ட கார்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏராளமான டீலர்கள், முன்பணம் செலுத்தாமல் முழுமையாக மாத தவணையிலேயே கார் வாங்கும் வசதியையும், கேஷ் பேக் ஆப்பர், இணைப்புச் சலுகைகள், இலவச உதிரி பாகங்கள், இலவச எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ், கூடுதல் வாரன்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி எடுத்துள்ளனர். இது தவிர குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பேடிஎம் ஆஃபர் என்று கூறி 8000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர், உணவு கூப்பன்கள், ஷாப்பிங் கூப்பன்கள் உள்ளிட்ட கவர்ச்சிகர சலுகைகளும் வழங்கப்படுகிறது.