நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மின்சார வாகன விற்பனை நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, 2019-20 நிதியாண்டில் தனது செயல்பாட்டினால் சமூகத்தில், சூழலில், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் நிறுவனமாகவும், உலகிலேயே 2ஆவது ஆட்டோ மொபைல் நிறுவனமாகவும் ஏத்தர் நிறுவனம் இந்த அறிக்கையை மதிப்பீடு செய்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆஸ்பயர், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
2019-20 காலகட்டத்தில் 7.5 மெட்ரிக் டன் கரியமில வாயு குறைப்பு
இதன்படி, ஏத்தர் எனர்ஜி நிறுவன மின்சார வாகனங்களால் 2019-2020 காலகட்டத்தில் 7.5 மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 125 சிசி ஸ்கூட்டரை சுமார் 15 ஆண்டுகள் ஓட்டுவதால் ஏற்படும் தாக்கத்துக்கு சமமானது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்களில் இதுவரை 40 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக 30 மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் பெண்கள் பணியாற்றும் நிறுவனம்
சூழல் தாக்கத்துக்கு அப்பால் ஏத்தர் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த பணியாளர்களில் 30 விழுக்காடு பெண்கள் தான். இந்திய ஆட்டோமொபைல் துறையிலேயே மிக அதிகளவில் பெண்கள் பணியாற்றும் நிறுவனமாக இது அமைந்துள்ளது. இதனால் இந்நிறுவனம் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இந்நிறுவனம் 80 விழுக்காடு எரிசக்தியை சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கவும், பயன்படுத்தும் 84 விழுக்காடு நீரை மறுசூழற்சி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் கிளைகள்
ஐ.நா அமைப்பின் நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை அடைய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரத்து 500 நபர்களாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் தங்களது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
மேலும், கிராஷ் டிடக்ஷன், எஸ்ஓஎஸ், டயர் பிரஷர் மானிட்டர், ரிமோட் டயக்னோஸ்டிக்ஸ் போன்ற வசதிகளை வாகனங்களில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
மெட்ராஸ் ஐஐடி முன்னாள் மாணவர்களான தருண் மேத்தா, ஸ்வனில் ஜெயின் ஆகிய இருவரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்