இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
தேவை குறைந்துள்ளதால் விமான எரிபொருளின் விலை கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. தற்போது விமான எரிபொருளின் விலை டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,812.62 (23.2 விழுக்காடு) சரிந்து 22,544.75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் இதே விமான எரிபொருளின் விலை 64,323.76 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்திற்குப் பின் விமான எரிபொருள் விலை சரிவது இது ஏழாவது முறையாகும். இந்தச் சரிவினால் டெல்லியில் விமான எரிபொருளின் விலை பெட்ரோல் டீசல்களின் விலையைவிடக் குறைவாக உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ. 69.59-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை தற்போது ரூ. 22.54 ஆக உள்ளது.
விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்திக்கொண்டாலும் எரிபொருளின் விலை சந்தையின் நிலைமைக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.