பிரெக்ஸிட்க்கு பின் அமல்படுத்தப்படவுள்ள புதிய வரி முறையின் மூலம் கிறிஸ்துமஸ் மரங்கள், பிரிட்ஜ், கோகோ ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையவுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் சர்வதேச வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய வரி முறையின் மூலம் தற்போது இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுமார் 62 மில்லியன் பவுண்டுகள் ரத்து செய்யப்படும்.
யு.கே. சர்வதேச வரி என்று அழைக்கப்படும் இந்த வரி முறைகள் பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டிருக்காத அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும். இருப்பினும், சர்வதேச போட்டியைக் கருத்தில்கொண்டு விவசாயம், மீன் பிடித்தல் ஆகியவற்றுக்குத் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி தொடரும்" என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியேறியது. இருப்பினும், தற்போது வரை இறக்குமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி முறையே பின்பற்றப்படுகிறது. பிரிட்டனில் இறக்குமதிகளுக்கான புதிய வரி முறை அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.