உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை.
இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற நாடுகளில் தனது தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும். ஆனால், இந்தியாவில் மூன்றாம் நிறுவனங்கள் மூலம்தான் ஆன்லைனிலும் ஆப்லைனிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் நேரடியாக தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால், அது தனது தயாரிப்புகளில் குறைந்தது 30 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தால் நேரடியாக தனது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியவில்லை, ஆனால், சமீபத்தில்தான் மத்திய அமைச்சரவை இந்த விதியை நீக்கியது.
இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தால் இனிமேல் தனது தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையளர்களுக்கு விற்க முடியும். முதலில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக தனது இணையதளம் மூலம் விற்பனையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனையை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்க ஆப்பிள் திட்டமிட்டிருந்தது, ஆனால் கரோனா பரவல் காரணமாக இது தள்ளிப்போனது.