சென்னை: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி நிறுவனமான அமர ராஜாவின் உற்பத்தி ஆலைகள், ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அருகே கரகம்பாடியிலும், சித்தூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், நேரடியாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இதைத் தவிர்த்து மறைமுக வேலைவாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அமர ராஜா பேட்டரி நிறுவனமோ எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதேவ் கல்லாவுக்குச் சொந்தமானது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
கடந்த ஏப்ரல் மாதம் அமரராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான கரகம்பாடி மற்றும் சித்தூரில் உள்ள ஆலைகளை மூட ஆந்திர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தங்கள் நிறுவனம் சார்பில் சுற்றுச் சூழல் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படும் தாக்குதல் எனப் புகார் எழுந்தது.
நெருக்கடியில் வோடபோன் ஐடியா: பங்குகளை விற்க தயாராகும் கே.எம். பிர்லா!
ஆந்திர முதலமைச்சருக்கு ஆலோசகராக உள்ள சஜ்ஜாலா ராமகிருஷ்ணா ரெட்டி, அமர ராஜா நிறுவனத்தின் செயல்பாடுகள் சூழல் விதிகளை மீறுவதாக உள்ளதாகவும், அரசுக்கு மக்கள் சுகாதாரம் மட்டுமே மேலானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் மறைமுகமாக அந்நிறுவனத்தை ஆந்திராவில் இருந்து வெளியேறும்படி பேசியதாகவும் கூறப்படுகிறது.
காய் நகர்த்தும் தமிழ்நாடு அரசு
தற்போது அமர ராஜா நிறுவனத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா அரசின் எதிர்ப்பால், தனது தொழிற்சாலைகள், செயல்பாடுகளை வேறு மாநிலங்களுக்கு நிறுவனம் மாற்றத் திட்டமிட்டுள்ளதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்நிறுவனத்தை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வர பல்வேறு மாநிலங்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ஆன் தி வே' ?
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருவதாகவும், அந்நிறுவனத்தை இங்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் துறை உயர் அலுவலர்களிடம் விளக்கம் கேட்க முயன்றபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.