ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு யுபிஐ (UPI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் செயலிகளில் கூகுள் பே (Google Pay) மிகவும் புகழ்பெற்றது. இருப்பினும், கடந்த சில நாள்களாக கூகுள் பே செயலி முறையான அனுமதியைப் பெறாமல் இயங்குவதாகவும், இதனால் அந்தச் செயலியில் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது ஏற்படும் பிரச்னைகளை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீர்க்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவிய இத்தகவலுக்கு கூகுள் பே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் பே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "கூகுள் பே செயலியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டது இல்லை என்ற தகவல் தற்போது பரவிவருகிறது.
ஆனால் இது முற்றிலும் தவறான தகவல், நீங்கள் தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்தின் (NPCI) இணையதளத்தில் இதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். கூகுள் பே அங்கீகரிக்கப்படாதது என்று ரிசர்வ் வங்கி கூறவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சமர்பித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்திலும் இதைக் குறிப்பிடவில்லை.