வருமான வரித் தாக்கலை தவறில்லாமல் முறையாக செய்வதை வெளிப்படையான மதிப்பீட்டு முறை உறுதி செய்கிறது. இந்த வெளிப்படையான கண்காணிப்பு, மதிப்பீட்டு முறை குறித்து ஏற்கனவே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மின்னணு மதிப்பீட்டு முறை ஒரு மறைமுக வரி மதிப்பீட்டு முறையாகும். ஆகவே இது வெளிப்படையான, பெயரில்லாத மதிப்பீடு முறை என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் வரி ஏய்ப்பை எளிதாகக் கண்டறிய முடியும்.
மேலும் வரி செலுத்துவோரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள். இந்த புதிய முறையில் வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் வர வேண்டிய அவசியமும் இல்லை. அதேநேரத்தில் வருமான வரி செலுத்துவோர் தங்களின் பிரதிநிதி அல்லது வருமான வரி அலுவலரை சந்தித்து விளக்கம் அளிக்க விரும்பினால் அதற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் இது தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது முழுமையான மின்னணு வசதிகள் கொண்டதாக இருக்கும் என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வருமான வரி தாக்கலுக்கான புதிய தளத்தை அறிமுகப்படுத்தினார். இதில், வெளிப்படையான வருமான வரி தாக்கல் உறுதி செய்யப்படும் என்றும் நேர்மையாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.