இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்தாண்டு நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கோவிட்-19 பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடர்பான விண்ணப்பங்களில் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் விண்ணப்பங்களில் சீன நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
சர்வதேச அளவில் 5ஜி சேவை வழங்குவதில் சீன நிறுவனங்களான ஹவாய், ZTE ஆகிய நிறுவனங்கள்தான் முன்னணியில் உள்ளன.
முதலில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை வழங்க பெங்களூருவில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துடனும் கொல்கத்தாவில் சீனாவின் ZTE நிறுவனத்துடனும் ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இருப்பினும், கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களையும் பொருள்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியாவில் அதிகரித்துவருகிறது. முன்னதாக, இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும்போது அதில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு வலிறுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் 5ஜி சோதனைகளுக்கு கூடுதல் விண்ணப்பத்தை தாக்கல் செய்வதாக பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதில் சீன நிறுவனங்களின் பெயர்கள் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. வோடபோன் ஐடியாவும் இதையே விரைவில் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து இவ்விரு நிறுவனங்களும் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த விண்ணப்பங்களில் நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடன் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபி 20 விழுக்காடு வரை சரியும் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!