நாட்டின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகளை ஏலமெடுக்க மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏலத்தின் முதற்கட்ட நிலைமை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
"தற்சார்பு இந்தியாவை நோக்கிப் பயணம்" என்ற கருத்தரங்கில் பேசிய அவர், இதுவரை ஏலத்திற்கு மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் முறையாக நிறைவடைந்தபின் ஏலத்தின் நகர்வுகள் இரண்டாம் நிலைக்குச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
பாரத் பெட்ரோலியத்தின் 52.98 விழுக்காடு பங்குகளைத் தனியாருக்கு விற்று சுமார் ரூ.2.1 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஏலத்திற்கு வேதாந்தா, குளோபல் ஃபண்ட்ஸ், அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கைத் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வுகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 17 ஆயிரத்து 355 பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள், ஆறாயிரத்து 156 எரிவாயு விநியோகத்தை பாரத் பெட்ரோலியம் மேற்கொண்டுவருகிறது. மேலும், ஆண்டுக்கு 4.3 கோடி டன் எண்ணெய் விற்பனையை இந்நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் மட்டும் மேற்கொள்கிறது.
இதையும் படிங்க:நவம்பரில் களைகட்டிய பண்டிகைக் கால வாகன விற்பனை!