தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / budget-2019

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு ! - சிபிஐ விசாரணை

மதுரை : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி சாத்தான்குளம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு !
சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு !

By

Published : Jun 30, 2020, 8:54 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன் இருவரும் ஒரே இரவில் (ஜூன் 22ஆம் தேதி) சந்தேகத்திற்கிடமான வகையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.

குறிப்பாக, கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது, காவலர்களின் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறைகள் இருப்பதாகவும் விசாரணையின்போது காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் காவலர் மகாராஜன் என்பவர் தன்னை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும் பரபரப்பு அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமர்ப்பித்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இருப்பினும் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்குள் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படலாம் என்பதால் அதுவரை அவற்றை தற்காலிகமாக சிபிசிஐடி அலுவலரிடம் ஒப்படைக்க மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதுவரை நெல்லை மாவட்ட சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கும்படி நெல்லை சரக டிஐஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தன்னிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் இன்று (ஜூன் 30) ஒப்படைத்தார்.

இதன் மூலம் தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்க உள்ளது. அதன்படி நாளை (ஜூலை 1) முதல் சிபிசிஐடி அலுவலர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தங்களது விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையில் கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் அளித்த முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான அனைத்து முகாந்திரமும் இருப்பதால், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details