மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தன்னுடைய காதலை சேர்த்து வைக்க கோரி வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் அவரை 9 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி அவருடைய மகன் பிரசாந்த் (24). இவர் திருமங்கலம் ராஜீவ் காந்தி நகரில் குடியிருந்துவருகிறார். எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வரும் இவர் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவருடைய காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் தொடர்ந்து காதலை ஏற்க மறுத்து பெண் வீட்டார் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - 9 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மீட்பு இதையறிந்த வாலிபர் பிரசாந்த் திருமங்கலம் அண்ணாநகர் எட்டாவது தெருவில் உள்ள நாகசாமி நகர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி பெட்ரோலுடன் தற்கொலை மிரட்டல் விடுத்துவந்தார். தொடர்ந்து ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் டவரில் இருந்து இறங்க மறுத்த அவரை தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கல்யாண் குமார் தலைமையில் மதுரையிலிருந்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வாலிபர் பிரசாந்த் தானாகவே கீழே இறங்கினார் அவரை மீட்டு போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் தற்கொலை மிரட்டலால் நாகசாமி நகர் முழுவதும் ஒன்பது மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.