தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 12) நிலவரப்படி, தமிழ்நாட்டில் 40,698 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள், இறந்தவர்கள் தவிர, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளிலும், தனிமை முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 28,924 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 2569 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 650 பேருக்கும், திருவள்ளூரில் 1752 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என புகார்கள் வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தாலும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரோனா தொற்று நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு ரயில்வே துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பெட்டிகளை கரோனா சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கையில் நோயாளிகள் படுக்க வைக்க திட்டமிட்டு, நடு படுக்கைக்கள் ( மிடில் பெர்த்) அகற்றப்பட்டன. பெட்டியில் உள்ள ஒரு கழிவறையை மரப்பலகை கொண்டு அடைத்து குளியலறையாக மாற்றப்பட்டு அங்கு ஷவர் உள்ளிட்ட வசதி வைக்கப்பட்டது. ரயில் பெட்டியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேப்டாப் மற்றும் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து இடங்களிலும் மருத்துவ உபகரணங்களுக்காக 230 வாட் திறன் கொண்ட சார்ஜிங் வசதி பொருத்தப்பட்டது.