மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடங்களாகிய நிலையில், ஐந்து வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவந்தார். மனைவி அருள்செல்வி திருமங்கலம் அருகே உள்ள கீழ செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், சுந்தர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தன்னுடைய கணவர் கட்டிலிலிருந்து திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார் எனக்கூறி, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அவரது மனைவி கொண்டு சென்றுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சுந்தர் உடம்பிலும், அவரின் விதைப்பையிலும் ரத்த காயங்கள் இருந்ததால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருமங்கலம் நகர் காவல் நிலைய காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் உடற்கூறாய்வுக்குப் பின்னரே அவர் இறந்தது குறித்த விவரம் தெரியவரும் என்றும், அதற்குப் பிறகே உடல் ஒப்படைக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையில் காவல் துறையினர் மனைவி அருள்செல்வியிடம் இரு தினங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், மனைவி அருள்செல்வி தனது சித்தி பாலாமணி, சித்தியின் மகன் சுமேர் ஆகியோருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து காவல் துறையினரிடம் அருள்செல்வி அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் அடிக்கடி மது போதையில் வந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து தனது சித்தி பாலாமணியிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாலாமணி இப்படிப்பட்ட கணவர் தேவையில்லை, அவரைக் கொலை செய்துவிடு என்று கூறியதால், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் குடிபோதையில் இருந்த சுந்தரைக் கொலைசெய்ய திட்டமிட்டு, அதன்படி அவரை அடித்து உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.