தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2020, 5:35 PM IST

ETV Bharat / briefs

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ராமதாஸ்
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன்பின் 28 நாட்களாகி விட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 64.85 டி.எம்.சியிலிருந்து 43.04 டி.எம்.சியாகவும், நீர்மட்டம் 100.01 அடியிலிருந்து 81.08 அடியாகவும் குறைந்து விட்டது.

அணையில் இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டும் தான், குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படாவிட்டால், குறுவை பருவத்தின் கடைசி கட்டத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி., ஜூலைக்கு 31.24 டி.எம்.சி என, மொத்தம் 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜூன் 10ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது.

அதன்பின் ஒரு மாதமாகியும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை. அதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் படவில்லை என்றால், குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும். இது குறித்து உரிய அமைப்புகள் மூலமாக கர்நாடகத்திற்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details