வாழ்வாதாரம் தொடர்பான இரண்டு ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் ஆலோசனை எழிலகத்தில், இணைய வழி காணொலி வாயிலாக, அதன் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் மனித வள மேம்பாடு, மாநில வளர்ச்சிக் கொள்கை குழு மூலம் நடைபெற்றது.
இந்த காணொலி ஆலோசனைக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வறண்ட நில வேளாண் வனவியல் அமைப்பு, கொல்லி மலையின் காடுகள் மற்றும் விவசாய சூழல் அமைப்புகளில் நன்மை பயக்கும் பல்வேறு நுண்ணுயிர்களின் ஆய்வுகள் தொடர்பாக, விளக்கமளிக்கப்பட்டது. இதனை வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் விவரித்தனர்.
முன்னதாக இந்த அமைப்பில் தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் என்ற ஒரு நிலையான வாரியம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு (முன்னதாக: மாநிலத்திட்டக்குழு) ஆகியவை இணைந்து, துணைத் தலைவரை தலைவராக கொண்டு, நில வளங்களை மதிப்பீடு செய்வது, நிலம் மற்றும் நீர் ஆதாரங்களில் உள்ள கொள்கை விருப்பங்கள்/தலையீடுகளை பல்வேறு துறை வல்லுநர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்யும் பணிகளில் ஈடுபடும். பின், அதன் ஆய்வு முடிவுகளை வைத்து நடத்தப்படும் பயிலரங்கங்கள் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
2011 - 2012 முதல் 2018 - 2019ஆம் ஆண்டு வரை, வாழ்வாதாரம், நிலப்பயன்பாடு, நீர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், ஈரநிலம் எனப் பல்வேறு துறைகளில் மொத்தம் 49 ஆராய்ச்சி ஆராய்வுகள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 42 ஆராய்ச்சி ஆராய்வுகள் நிறைவடைந்துள்ளன.