பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னைவாசிகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த கிருஷ்ணா குடிநீரானது ஆந்திரா, தமிழ்நாடு நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி அளவும் நீரையும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி அளவும் நீரையும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காததால், இந்த காலத்தில் தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். போதிய அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு மறுத்துவிட்டது.
இவ்வேளையில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து தமிழ்நாடு சார்பில் தண்ணீர் திறக்கக் கோரி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா, கண்டலேறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.