திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கிவரும் தனிநபர் அரிசி ஆலையில் இருந்து காற்றில் உமிகள் பரவி கலந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணற்றில் உமிகள் மிதந்துகிடந்துள்ளன.
அதைப் பொதுமக்கள் வீட்டுக்கும் பயன்படுத்தி வருவதாகவும், அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல், ஆலைக்கு வெளியிலேயே தேங்கிக் கிடப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.