உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14ஆவது லீக் போட்டி ஜூன் 9ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக, இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வார்னர், தனக்கு பந்துவீசிய வலைப் பந்துவீச்சாளரின் தலையை பதம்பார்த்துள்ளார்.
வார்னர் ஸ்ட்ரைட் திசையில் அடித்த பந்து, எதிர்பாராத விதமாக வலைப் பந்துவீச்சாளரின் தலையை மின்னல் வேகத்தில் பதம்பார்த்ததால், அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் அடிபட்ட நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய்கிஷன் ஆவார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வார்னர் தனது வலைப்பயிற்சியை ரத்து செய்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெய்கிஷன் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெய்கிஷன் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2014இல் ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்துவீச்சினால், உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய வீரர்களையும், கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.