இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று உலக அகதிகள் நாள். தமிழ்நாடெங்கும் அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழ் அகதிகளது நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். மத்திய அரசு அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மார் முதலான நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்த, இந்து, சீக்கியர், பௌத்தம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை கொடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
கடந்த ஆட்சியின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டம் தற்போது காலாவதியாகிவிட்டது. மீண்டும் அதைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அகதிகளை மத ரீதியில் பாகுபடுத்தும் இந்தச் சட்டத்தை மனித உரிமைகள் ஆர்வலர்களும், ஜனநாயக சக்திகளும் எதிர்த்தார்கள். அப்படி சட்டம் கொண்டுவரும்போது கூட இலங்கையில் இருக்கின்ற, அங்கிருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை இந்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
அந்தந்த நாடுகளில் சிறுபான்மை மதங்களாக இருப்பவர்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று சொன்ன அவர்களின் வரையறையின்படி கூட ஈழத்தமிழர்களை கவனத்தில் கொள்ளவில்லை. இந்திய அரசு அகதிகள் தொடர்பாக ஐநா ஏற்படுத்திய இரண்டு ஒப்பந்தங்களில் இதுவரை கையெழுத்திடவில்லை. நீதிபதி பி.என். பகவதி தலைமையிலான குழு 1996ஆம் ஆண்டு தேசிய அகதிகளுக்கான மசோதா ஒன்றை வடிவமைத்து மத்திய அரசிடம் வழங்கியது. அது இதுவரை சட்டமாக்கப்படவில்லை.