நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் இந்தக் கோயிலில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், சொர்ணாபிஷேகம் ஆகிய சிறப்பு ஹோமங்களைச் செய்து வழிபடுவார்கள்.
மற்ற கோயில்களில் முகூர்த்த நாட்களில் மட்டுமே திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் அஷ்டமி, நவமி நாட்கள் என்றும் இல்லாமல், பூஜை செய்து கொள்பவரின் நட்சத்திரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறு தினந்தோறும் இந்தக் கோயிலில் திருமணங்கள் நடைபெறும். அதனால் திருக்கடையூருக்கு நாள்தோறும் பல்வேறு வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
தற்போது ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு மேல், கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை நீடிக்கிறது. அர்ச்சகர்கள் மட்டும் தினசரி பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் கோயிலுக்கு வெளியே நின்று, சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டதால், இந்தக் கோயிலில் செய்யப்படவிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணம் மற்றும் சாந்தி பூஜைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். கோயிலுக்கு பக்தர்கள் வருவது தடைபட்டதால், கோயிலைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், வியாபாரக் கடைகள் மூடப்பட்டு திருக்கடையூர் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் இந்தக் கோயிலை மட்டுமே நம்பி வாழும் அர்ச்சகர்கள், சிப்பந்திகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பூ வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, பல லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களையும் திறக்கவேண்டும். குறிப்பாக, திருக்கடையூர் கோயிலைத் திறந்து பக்தர்கள் வழிபட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.