கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை தோவாளை, அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 கிராம நிர்வாக அலுவலர்கள் வந்தனர்.
பின்னர் திடீரென அவர்கள் தங்கள் இடமாறுதலை ரத்து செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், "எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். எங்களுக்கு முறைப்படி பொது கலந்தாய்வு வைத்து இடமாறுதல் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் பொதுவாக கலந்துதான் இடமாறுதல் செய்வார்கள். ஆனால், இந்த வருடம் அதைப் பின்பற்றாமல் இடமாறுதல் செய்துள்ளனர். எனவே இந்த இடமாறுதல் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தியும், ஏற்கனவே போட்ட இடமாறுதலை ரத்து செய்யக்கோரியும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது" எனக் கூறினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மயில் பேச்சுவார்த்தை நடத்தினார்.