உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனாவால் 210க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் அமெரிக்காவில் மிகத் தீவிரமாக பரவத்தொடங்கிய அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 40 லட்சத்து 30 ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்தும் உள்ளதாகவும், 18 லட்சத்து 87 ஆயிரத்து 486 பேர் குணமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார். அதன்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து உலகளவில் முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் தனது நிர்வாகம் மிகச்சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவிட்-19 நெருக்கடி காரணமாக வீழ்ந்த அமெரிக்க பொருளாதாரம் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொற்றுநோய் இப்போது நாட்டின் வெப்பமயமான பகுதுகளில் (சன் பெல்ட்) பரவி வருகிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம், தமது குடும்பத்தில் கொடிய கரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்கிறேன். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக நாம் விரைவில் தடுப்பூசி ஒன்றை உலகிற்கு அளிப்போம் என உறுதியளிக்கிறேன். கொடிய வைரஸை நாம் நிச்சயமாக தோற்கடிப்போம்.