கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக பயணம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்ல வேண்டிய அத்தியாவசிய சூழலில் பொதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வந்த நிலையில், சிவப்பு மண்டலமான சென்னையில் இது மிகத் தீவிரமாகக் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை மீறி செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் அபராதத் தொகையான 500 ரூபாயை போக்குவரத்து காவல் துறையினர் வசூலித்து வந்தனர்.
இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் இரண்டு பேர் பயணித்ததாகக் கூறி சென்னையில் இரண்டே நாள்களில் போக்குவரத்து காவல் துறையினர் 1,700 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களிடமிருந்து தலா 500 ரூபாய் என மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்துள்ளனர். ஏற்கெனவே முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றுவோர் மீது 500 ரூபாய் அபராத தொகையை போக்குவரத்து காவல் துறையினர் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.