மத்திய ஆப்பிரிக்க குடியரசான பாங்குவைச் சேர்ந்த பெண்மணிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டில் இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன. எர்வினா, ப்ரீஃபினா என அழைக்கப்படும் இந்த ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு, மண்டை ஓடு மற்றும் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பொதுவாக இருந்தது மருத்துவ சோதனைகளில் பின்னர் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்த குழந்தைகளை நேரில் சந்தித்து இத்தாலியின் பாம்பினோ கெசு மருத்துவமனையின் தலைவர், குழந்தைகளின் தாயிடம் மருத்துவத்திற்கான உதவிகளை தாம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டு காலமாக பாம்பினோ கெசு (பேபி ஜீசஸ்) குழந்தை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர், மயக்க மருந்து வல்லுநர், நரம்பியல் மருத்துவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர், இயன்முறை மருத்துவர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு அறுவை சிகிச்சைக்கு குழந்தைகளின் உடல் தகுதியை அடைய வைத்திருந்தனர்.
இதனையடுத்து, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு 18 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற தொடர் அறுவை சிகிச்சையை அடுத்து தனித்தனியாக பிரிக்கப்பட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், " இத்தாலியில் மட்டுமல்ல உலக அளவில் இந்த அறுவைச் சிகிச்சை தான் முதன்முதலில் நடந்து, வெற்றிப் பெற்ற முதல் அறுவை சிகிச்சையாகும்.
இதுபோன்ற ஒரு நிகழ்வு மருத்துவ வரலாற்றில் எங்கும் நடைபெற்றதில்லை. எந்த மருத்துவ நூலிலும் மேற்கோள் காட்டப்பட்டதில்லை. இந்த இரட்டைக் குழந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
ஒரு குழந்தையின் மண்டை ஓடு மற்றொரு குழந்தையின் மண்டை ஓட்டோடு இணைந்திருந்தது. அரிதான மற்றும் மிகவும் சிக்கலான வடிவிலான கிரானியல் மற்றும் பெருமூளை இணைவு அவர்களிடம் இருந்தன.