உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 577 பேர் பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு பாதுகாப்பில் இருந்த காவலருக்கு கரோனா தொற்று இன்று (ஜூன் 21) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 27 வயதான காவலர் ஒருவர், கடந்த 35 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டில் பாதுகாப்பு பணியாற்றி வந்துள்ளதாக அறிய முடிகிறது.