மதுரை மாவட்டம், உத்தப்ப நாயக்கனூரைச் சேர்ந்த பாலு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "எனக்கு ஒரு ஆண் குழந்தையும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில், எனது மகள் டார்த்தி (24) பிறந்த போது எனது குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தது.
இதனால், கடந்த 1996ஆம் ஆண்டு ஒரு செவிலியரின் ஆலோசனையின் பேரில் எனது மகள் டார்த்தியை, திருச்சியில் கிடியன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த மோஸ் மினிஸ்ட்ரி என்ற இல்லத்தில் சேர்த்து விட்டோம்.
பின்பு 2017ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை அடுத்து, எனது மகள் டார்த்தி திருச்சி சமூக நலத்துறை அலுவலர் பராமரிப்பில் நடத்தப்படும் இல்லத்திற்கு மாற்றப்பட்டு இதுநாள் வரை அங்கு தங்கியிருந்தார்.
இதற்கிடையில், கடந்த 11.08.2020 அன்று திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சார்பில், திருச்சி கே.கே.நகர் காவல் ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் எனது மகளை ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எனது மகளை அடையாளம் தெரியாத ஒரு நபருடன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
எனவே எனது மகளை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, வழக்கு குறித்து திருச்சி காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.