திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு, புங்கபட்டு நாடு, நெல்லி வாசல் நாடு, ஆகிய கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மலையாளி இனத்தவர்கள் சுமார் 100 ஆண்டு காலமாக வாழ்ந்துவருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு வனமசோதா சட்டத்தின்படி, அரசு தரிசு நிலத்தில் பயிர் செய்து வருபவர்களின் ஜீவனத்திற்காக பட்டா வழங்க வேண்டும்.
ஆனால் மூன்று தலைமுறைகளாக வீடுகட்டி பயிர் செய்துவரும் ஏழை மலைவாழ் மக்களை வெளியேற்றி தாவரவியல் பூங்கா அமைத்திட அரசு முயற்சிகளை செய்துவருகிறது.
அரசு அதனை கைவிட்டு நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும். மலையாளி இன பழங்குடிகள் உள்பட அனைத்து பழங்குடி மக்களுக்கு தாமதமில்லாமல் உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கேரள அரசை போல் ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் தரமான தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது தொடர்பாக சார் ஆட்சியர் வந்தனா கர்க்கிடம் மனு அளித்து சென்றனர்.