ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்.23) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது .
பயிற்சின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், ”ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே இரண்டாம் தேதி அன்று காலை 8 மணி முதல் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது .
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகளும் , தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேசைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும் .
ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண் பார்வையாளர் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எணணிக்கை தொடங்குவது முதல் இறுதிவரை நுண் பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும் . வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி, எந்த மேசையில் பணியாற்றிட வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும் .
முதலில் தபால் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும். தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று எண்ணிக்கைக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து எடுக்கப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு , அடுத்த சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும் .
நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்ணை 17 சி படிவத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து , தங்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுக்கான பொத்தானை அழுத்தியவுடன் கட்டுப்பாட்டு கருவி முகவர்கள் பார்வைக்குத் தெளிவாக தெரியும் வகையில் வைக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை இரு பிரதிகள் தயாரித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் கையொப்பம் பெற்ற பின்பு சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பார்” என்றார்.