நெல்லை மாவட்டத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல்வேறு புத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை- மகன் சிறை மரணம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தென்மண்டல காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் காவலர்கள் தங்கள் பிறந்தநாள் அன்று விடுமுறை எடுத்துக்கொள்ள சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், 110 காவலர்கள் பங்கேற்றனர். மஹா யோகம் யோகா அமைப்பின் முதன்மை பயிற்சியாளர் ரமேஷ் ரிஷி, யோகா பயிற்சியினை அளித்தார்.
பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காகவும் பணிச்சுமையால் ஏற்படும் குடும்ப பிரச்னையில் இருந்து மீண்டு மன அமைதி ஏற்படுத்துவதற்காகவும் இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.