தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமாருடன் பணியாற்றிய சம்பத் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். சிறையில் உள்ள அவர், தனக்கு பிணை வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. சம்பத் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மனுதாரர் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். ஒரு வழக்கில் கைது செய்பவரை நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு மனுதாரர் சம்பத்துக்கு பிணை வழங்க வேண்டும்" என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதி செல்வகுமார், சம்பத் சாட்சிகளை கலைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்றும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்பட்டால் நேரில் ஆஜராக வேண்டும், விசாரணையின் போது தலைமறைவாகக்கூடாது என்றும் நிபந்தனையுடன் பிணை வழங்கினார்.