இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத (No Drug of Choice) சூழலில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, அதனை கரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றது.
உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவிட்-19 தொற்று நோயிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து இரத்தக் கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் (Apheresis Method) 500 மி.லி பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18-65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14ஆவது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி பெறுவர்.
உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.
பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.
இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2ஆவது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ள முடியும்.