தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் நபர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இவர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்யும்போது அதிக அளவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று குஜராத்தில் இருந்து நிடாமங்கலம் பகுதிக்கு வருகை தந்த 6-வயது சிறுமி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 23 நபருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 பேர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஐந்து பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஐந்து பேர் என மொத்தம் 25 நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதன்மூலம் திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது. இதில் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.