திருவண்ணாமலை நகரின் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்! - மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
திருவண்ணாமலை: தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் சிவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தலைவராக பங்கஜ்குமார் பன்சால், பதவி ஏற்ற பிறகு தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை ஏவுவது, முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக ஆட்குறைப்பு செய்வதும், துணை மின் நிலையங்கள் உட்பட மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டித்து மின்சார வாரியத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பொறியாளர்கள் உட்பட அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றோம். வாரியத்தலைவர் தன்னுடைய செயல்பாட்டை திருத்திக் கொள்ளாவிட்டால், அவரை திருத்துவதற்கு தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை குழுவின் சார்பாக எதிர்காலத்தில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். வேலைநிறுத்தங்கள் உட்பட நடத்த வேண்டியிருக்கும்' என்றார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச்சையான உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடாது, கரோனாவில் உயிர் இழந்த மின்வாரியத் தொழிலாளிகளுக்கும் மற்ற துறைகளுக்கு வழங்குவதுபோல் ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும், துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோர்சிங் என்ற நவீன பெயரால் தனியார் மயம் ஆக்கக்கூடாது.
வேலைப்பளு ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகளை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும், கரோனா காலத்தில் பணிக்கு வர முடியாத நாட்களுக்கு அரசாணை 304இன் படி சிறப்பு விடுப்பு அளிக்கப்படவேண்டும், ரத்து செய்த சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும், ஊர் மாற்றல் உத்தரவில் வாரிய வீடுகளை மீறக்கூடாது.
ஊக்கத்தொகை பெறுவதற்கு ஆண்டு உயர்வு பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச பணிக்காலம் மூன்று ஆண்டுகள் என முன்தேதியிட்டு அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பநிலை பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தங்களை மதித்து நடந்து தொழில் நல்லுறவைப் பேண வேண்டும்' என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.